மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!
இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை எந்தப் பெண்ணாவது தன் தலையில் சூடி அழகு பார்த்திருக்க முடியுமா? சூடிப் பார்த்துவிட்டு,"நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே? நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன குடி முழுகிப் போய் விடும்? "என்று தந்தையிடம் கேட்டிருக்கத் தான் முடியுமா?
ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டு தான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வருவாள்.
பிள்ளைப் பருவத்தில் அரங்கன் மீது பித்தான அன்பு பின்பு காதலாகியது பருவ வயதில்
அரங்கன் மீது ஆண்டாளுக்கு அத்தனைக்காதல்
காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!
கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.
ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!
அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.
அதற்கு சாட்சி இந்தப்பாடல்.
ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.
'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?
யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!
அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)
{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}
அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.
இந்த யுக்தி உதயமானதுமே கவிதை பீறிட்டுக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.
*கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் "செவ்வாய்" தான் தித்தித்திருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே!
கருப்பூரம் என்றால் மாலவனுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூ என்றால் கமலப்பூ தாமரை
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம் சந்தேகம் கேட்கிறாள்.
மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!
இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?
ஆண்டாள் அதிகம் பாடவில்லை தான்.
மொத்தம் 143 பாடல்தான்.
ஆனால்,நாச்சியார் திருமொழியின் அந்தப் பாசுரங்களுக்குள் ஒரு நட்சத்திர அஸ்தஸ்து இதற்கு மட்டுமே உண்டு.
* இது நட்சத்திரப் பாசுரம் *
எளிமையும் இனிமையுமான காதல் பாடல்தான் எல்லாமே, ஆனாலும் காதலின் வேகம் இந்தப் பாடலில் வெளிப்படுகிறது நளினமாகவும்.
பக்தியில் பல வகைகள் உண்டு.
இறைவனை தாயாய், தந்தையாய், தோழனாய், தலைவனாய், சேவகனாய் இன்னும் பலப்பல வடிவங்களில் கண்டு,பாடி பக்தி செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் காதலனாக வரித்துக்கொண்டு கவிதை மழை பொழிந்தவள் ஆண்டாள் தான்! வடதேசத்துக்கு ஒரு மீரா என்றால் நம்மூருக்கு ஆண்டாள்!
///*தமிழ்மணநட்சத்திர பதிவில் நேற்று சுட்டது,